பெரிய மருதுவும், சின்ன மருதுவும் வளரி வீசுவதில் வல்லவர்கள். வளரி என்றும் ஆயுதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆற்றலும், திறமையும் படைத்த ஒருவர் முன்னூறு அடி தூரத்தில் உள்ள ஒரு பொருள் மீது கூட வளரியை ஆச்சரியப்படத்தக்க வகையில் குறிபார்த்து எறிந்து வீழ்த்திவிடலாம். ஆங்கிலேயத் தளபதி கர்னல் வேல்ஷ், சின்ன மருதுதான் முதன் முதலாக ஈட்டி எறியவும், வளரியைச் சுழற்றி எறியவும் தனக்குக் கற்றுக் கொடுத்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சின்ன மருதுவைப் போலவே, பெரிய மருதுவும், வளரி எறிவதில் வல்லவராகவும் நிகரற்றவராகவும் விளங்கினார். ஒரு முறை பெரிய மருது மதுரை சென்றிருந்தார். மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பகுளத்திலிருந்து வளரியை வீச ஆயத்தங்கள் செய்தார். பெரிய மருது தெப்பக்குளத்தில் நின்று கொண்டு தனது கால் விரல்களை நன்கு தரையில் ஊன்றிக் கொண்டு, வளரியை வேகமாக விட்டெறிந்தார். அவர் எறிந்த வளரி மாரியம்மன் தெப்பக்குளத்தின் நடு மண்டபத்தைத் தொடாமல் அக்கரையில் போய் விழுந்தது என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு மருதரசன் தனது மூச்சைப் பிடித்து வளரியை மிக வேகமாக எறிந்த வேகத்தில் அவர் இடுப்பில் கட்டியிருந்த தங்க அரைஞான் தெரித்து விழுந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் தான் சென்ற 31-10-2007 அன்று தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மருது பாண்டியர்களின் சிலையை அவர் கைப்பட திறந்து வைத்தார்